அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு யோசனையில் அரசியல் நோக்கம் இல்லை. மக்களுக்கு முடிந்தவரை அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் பாடுபடும்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். சேனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைய, இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், வாழ்க்கை செலவுகள், பொருளாதார நிலைமைகள், பணம் செலுத்தும் திறன் போன்ற அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி இந்தக் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்மொழியப்பட்ட தீர்வுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Srilanka Tamil News