Srilanka Tamil News
அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விஐபி விளக்குகள்
மேலும், கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸார் மறித்து விசாரணை நடத்தினர்.
எனது, வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, “தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக” கூறினார்.