Srilanka News Tamil
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.