கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி பாடசாலை மாணவிக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி அளித்துள்ளார்.
நாளுமன்றத்தில் இன்று (9) இடம்பெற்ற அமர்வின் போது கொழும்பு பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார். அதோடு ,
கொழும்பு பாடசாலை மாணவி தற்கொலை செய்துக்கொண்டமை கவலைக்குரியது. இது உணர்வுபூர்வமானதொரு விடயம்.இவ்வாறான சம்பவங்களை எவருக்கும் குறிப்பாக பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாது.
ஆகவே இவ்விடயம் குறித்து பேசுவதிலும் தலையிடுவதிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் ரீதியானதாக கருதக் கூடாது. 15 வயது மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆகவே சமூகம் என்ற அடிப்படையில் அனைவரும் தோல்வியடைந்துள்ளோம்.இதற்கு அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறான சம்வங்கள் இனியும் தோற்றம் பெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை.இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை?
குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன் அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவிகார அமைச்சருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன். கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பாடல் நிலையில் செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்றை வகுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி தெரிவித்தார்.