கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்த்து கொண்ட விவகாரத்தில், சந்தேகநபர்களாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் அல்லது ஆசிரியர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப்பட்டு செயலாற்றக் கூடாது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறுவர்கள் தொடர்பில் இடம்பெறும் இதுபோன்ற துஷ்பிரயோகங்கள் குறித்து நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அவ்வாறான சம்பவங்கள் குறித்து தகவல்களை மூடிமறைக்காமல் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு விரைந்து அறியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த அதிகார சபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.