ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் இன்று (28) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நேற்று (27) மாலை 6:55 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை நீடிக்கிறது. இந்நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பூரத்தன்று அம்மனை கண்ணாடி வளையல்களால் அலங்கரித்து வணங்குவர். வழிபாட்டிற்கு பின், இந்த வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இவற்றை அணிவதால், அம்பாளின் தாய்மை கோலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத பெண்கள், நல்ல கணவனும், தீர்க்க சுமங்கலி வாழ்வும் கிடைக்க வேண்டி வேண்டுவர். சிலர் மஞ்சள் தாலி கட்டுவதும் உண்டு.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், வீட்டில் பூஜை அறையில் அம்மன் படத்திற்கு பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். வைணவக் கோவில்களில், ஆண்டாள் அவதரித்த நாளாக கருதப்படுவதால், ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்த புனித நாளில் அம்மனை வணங்கி, ஆன்மிக பலன்களை பெறுவோம்!