காஸாவில் மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
‘ஹன்டாலா என்ற கப்பலில் காஸாவை நோக்கி மனிதநேய உதவிகள் வழங்கச் சென்ற 21 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது. காஸாவுக்கு 40 மைல் தொலைவில் நியாயமற்ற முறையில் கப்பலை இடைமறித்ததோடு, அதில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் மற்றும் பிற தொடா்பு சாதனங்களும் தகா்த்தெறியப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. காஸாவில் கடும் பட்டினியால் தவித்துவரும் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட நிவாரணப் பொருட்களே கொண்டுசெல்லப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



