17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் டி 20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹொங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கும், சரியான லெவன் அணியை கண்டறிவதற்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது. முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு இந்திய வீரர்கள் போட்டிக்கு முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக அணி முகமது வாசீம் தலைமையில் களம் காணுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் விளாசியவர் (114 சிக்சர்) என்ற பெருமைக்குரியவர் வாசீம். அவர் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடந்த 2-3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி சரியாக செயல்பட்டு முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்க முடியும். ஓமனை நாங்கள் வீழ்த்தி விடுவோம். மற்ற இரு அணிகளில் ஒன்றை வீழ்த்தி சூப்பர்4 சுற்றை எட்டுவதே எங்களது இலக்கு' என்றார். சாதகமான உள்ளூர் சூழல் மட்டுமின்றி, அந்த அணிக்கு இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் அனுகூலமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
ஐக்கிய அரபு அமீரகம்: முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, ஆசிப் கான், முகமது பரூக், ஹர்ஷித் கவுசிக், முகமது சோகைப், முகமது ஜவாதுல்லா அல்லது சாகிர் கான், ஹைதர் அலி, ஜூனைத் சித்திக், முகமது ரோகித்.
இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது



