கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிரான நிதி மோசடி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து 300,000 ரூபாய் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மத்திய பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபரான அதிகாரி பணியாற்றி வருகின்றார்.
குறித்த அதிகாரி ஏற்கனவே ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை திருமணம் செய்திருந்த நிலையில் மற்றுமொரு ஒரு பெண்ணை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
சந்தேக நபர் அங்குலானா பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் உறவை வளர்த்துள்ளார்.
அந்த நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரிடமிருந்து 300,000 ரூபாய் பணத்தைப் பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் பணத்தைப் பெற்ற பிறகு, அவர் தன்னை தவிர்க்க தொடங்கியதாகவும், திருமணமான ஒரு கான்ஸ்டபிளின் கணவர் என்பதும் பின்னரே தெரியவந்தது எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியான பின்னர் அவர் உறவை நிறுத்திவிட்டு, தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். எனினும் பணத்தைத் திருப்பித் தராததால், கடந்த 14 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னைத் தவிர, அதே பகுதியில் பணிபுரியும் ஒரு ஆசிரியையுடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.