இலங்கை பொலிஸாருக்கு தண்ணி காட்டிய இஷாரா செவ்வந்தி; நேபாளத்தில் அதிரடியாக கைது

 

Tamil lk News

 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். 


கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி   பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார்.




இந்நிலையில் இலங்கை பொலிஸாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 




இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் முன்னதாக தெரியவந்தது. 


கொலையைச் செய்த துப்பாக்கிதாரி அதே நாளில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டார். 




அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் சாரதியும் இதன்போது கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வேன் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 


இந்நிலையில் கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது பொலிசாருக்கு தெரியவந்தது. 


துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். 




துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 


நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியுள்ளார். 




அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்