அம்பாறையில் மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னேரியா இராணுவ முகாமில் கடமையாற்றும், மகாஓயா - சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொலைசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றுமொரு இராணுவ சிப்பாயின் மனைவியுடன் நீண்ட காலமாக தகாத உறவில் இருந்துவந்துள்ளார்.
சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய், சந்தேக நபரின் மனைவியுடன் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளார்.
இதன்போது வீட்டிற்கு சென்ற சந்தேக நபர், இராணுவ சிப்பாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து 34 வயதுடைய மின்னேரியா பீரங்கி படைப்பிரிவில் கடமையாற்றும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



