மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இவ்வாறு மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்ற குழுவில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையூடாகச் செயற்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புத் தொடர்பில் நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகள் வழங்கிய புலனாய்வுத் தகவல்களுக்கமைய, மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகு ஒன்றையும் ஆறு மீனவர்களையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.
குறித்த படகு தற்போது மாலைத்தீவுக்குக் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மீனவர்களையும் விசாரணை செய்வதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று தற்போது மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



