"டித்வா" சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
தொடர்ச்சியான கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதை முன்னிட்டு, விரைவான வான்வழி மீட்பு நடவடிக்கைகள் அவசியமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படையுடன் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்புகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு மற்றும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு செயல்பாடுகளை வலுப்படுத்த இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் பொலிஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இலங்கை கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியாவின் விமானந் தாங்கி கப்பலான விக்ராந்த் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



