திருகோணமலை(Trincomalee) புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எம்முடைய அரசாங்கத்தை ஜனநாயக ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ வீழ்த்த முடியாது. இதனால், இனவாதத்தை தூண்டி இந்த ஆட்சியை கவிழ்க்க சிலர் விரும்புகின்றனர்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி ஒரு நடந்த விடயங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளேன்.
நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலையை அகற்றவோ மேலும் கட்டுமான வேலைகளை செய்யவோ அல்லது வேறு எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இவ்வாறிருக்க, ஹனுமான் தீ வைத்தது போல, தற்போது இந்தப் பிரச்சினையை இனவாதமாக மாற்றி தீ வைக்க சிலர் முயல்கின்றனர்.
நாங்கள் இனவாதத்திற்கு மீண்டும் இடமளிக்க மாட்டோம் என உறுதியாக கூறிகொள்கின்றோம். நாம் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.




