இன்று (மார்ச் 21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான சீர்திருத்தங்கள், நாட்டு மக்களின் பொறுமை மற்றும் நம்பிக்கையில் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் கீழ் கடனைப் பெறுவதற்கான இலங்கையின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இலங்கைக்கு வழங்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.