Srilanka News Tamil
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (President Anura Kumara Dissanayake) தகர்த்தெறிந்துள்ளார் என அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை அரச ஊழியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். எனினும், இன்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அரச ஊழியர்கள் போராட்டம்
அரச ஊழியர்களை ஏமாற்றும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி ஒரு மனதாக அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த இலக்கை அடையவே பெரும்பாலான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர்.
ஆனால், அந்த நம்பிக்கை இன்று தகர்ந்து போயுள்ளது. இது அரச ஊழியர்களுக்கு மிகப்பெரிய அடியாக நாங்கள் பார்க்கின்றோம்.

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் - ஜனாதிபதி அறிவிப்புு
அரச ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பள உயர்வினையே இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இது அரச ஊழியர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத் தொகையை நாங்கள் ஏற்கவில்லை.
எனவே, அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை. அப்படி இல்லையென்றால், நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.