பொரளை கனத்த பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் ஐந்து பேர் ஆண்கள் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.
இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கனரக வாகனம் போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியுள்ளது.
அதுருகிரிய பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் கனரக வாகனத்தில் ப்ரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.