இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே இன்று மாலை நிகழ்ந்த பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் பலியானதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (10) மாலை 6.52 அளவில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சமிக்ஞையில் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்து சமிக்ஞை அருகே மெதுவாகச் சென்ற ஒரு சிறிய ரக சிற்றூந்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய ஒரு சிறிய ரக ஹூண்டாய் ஐ20 அல்லது மாருதி சுவிஃப்ட் டிசையர் எனச் சந்தேகிக்கப்படும் சிற்றூந்தே இந்த வெடிப்பின் மையமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், அருகில் இருந்த 22 வாகனங்கள் தீப்பிடித்தன.
வெடிப்பு சிற்றூந்தின் பின் பகுதியில் ஏற்பட்டிருக்கலாம் என்றும், எனினும், அது தரையில் பள்ளத்தை ஏற்படுத்தவில்லை என்றும் டெல்லி காவல்துறை தகவலகள்தெரிவித்தன.
வெடிப்புக்கான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்து ஆராய இந்தியாவின் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த சிற்றூந்து வெடிப்புச் சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்கள் இருவரின் ஹரியானாவின் ஃபரிதாபாத்திலுள்ள வீடுகளில் இருந்து சுமார் 3,000 கிலோகிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட மருத்துவப் பணியாளர்கள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதலுக்கும், ஹரியானாவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருளுக்கும் ஏதேனும் நேரடித் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



